ஸ்ரீ ராகவேந்திரர் நாம மகிமை

1. ராகவேந்திரர் நாமம் தன்னை நாளும் இங்கே ஜெபிக்கவே!
க்ஷேமம் உண்டாம்! ஜெயமும் உண்டாம்! ஜெகமெலாம் அருள்
தழைக்கவே!!

2. நாதன் நாமம் நாளும் பாட, நலமும் வளமும் கொழிக்கவே!
வேதம் போலது விழைந்து சொல்பவர், வெற்றிக்கும்
வழி வகுக்கவே!!

3. எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்!
எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில்
பாடுவோம்!!

4. நாளும் கோளும் நலமே செயவே நயந்து இங்கே நாடுவோம்!
நல்லதே செய நாடும் உள்ளம் நாளும் வளரப்
பாடுவோம்!!

5. துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப்
பாடுவோம்!!

6. காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணைதனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில்
பாடுவோம்!!

7. ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப்
பாடுவோம்!!

8. மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனமதும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து
பாடுவோம்!!

9. இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும்
வழியுரைப்பவன்!!

10. மன இருள்தனை நீக்கி அருளும் மகிமைதனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப்
பாடுவோம்!!

11. பொன்னும் மணியும் புவனம் போற்றும் புகழும் நமக்கே தருபவன்!
இன்னலகற்றி இன்பம் தருவான்; இணையடிதனை
நாடுவோம்!!

12. மண்ணதும் இங்கு மருந்தென்பார் அவர் மகிமைதனையே அறிந்தவர்!
உண்ணும் ஒவ்வோர் கணமதும் இங்கு உயர்ந்ததாகிட
வேண்டுவோம்!!

13. ஈசனிடத்தெம்மை இட்டுச் செல்லும் ஏணியாகும் நாமமே!
காசினியிற் கண்கண்ட தெய்வமாய் எமைக் காக்கவென்றே
வேண்டுவோம்!!

14. பஞ்சபூதம் இட்ட பணியும் செய்யுமவர் பக்தர் ஓர்
சொல்லும் சொல்லவே! தஞ்சமென்றவர்த் தாளைப்
பணிந்தவர் தகுதி ஈதெனச் சொல்லவோ!!

15. விஞ்சையர் குலம் விழைந்தெமைத் தொழ வேண்டும்
வரமதும் தருபவர்! நஞ்சும் அமுதாய் நலமதும்
தர நல்லருள் தரும் நாயகர்!!

16. பாடிப் பணிந்தவர் பக்தியுடன் சொலப் பரமனவன்
திரு நாமமே! கோடிப் புண்ணியம் குவலயத்திடை
கொண்டு தரக் கொண்டாடவே!

17. எட்டு நூறு ஆண்டுகள் இங்கு எம்மனோர்க்கருள் செய்பவன்!
அட்டமா சித்தி அனைத்தும் பெற்றிட அருள் புரிந்தெமை
அள்பவன்!!

18. அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன்
திருவடிதனைப் பணிந்திட! வரமும் விழைந்தது வணங்கித்
துதிப்பவர் வள்ளல் அருளால் பெறுவரே!!

19. குருவும் அவரென்று கொண்ட குலமதும் குவலயந்தன்னில்
தழைத்திட, திருவும் கல்விச் செல்வமும் தருவான்;
திருவடிதனைப் போற்றுவோம்!!

20. துன்பம் தவிர்த்து, தொடர்ந்து நாளும் துணையென
இங்கு வருபவன்!! தூயவன் அவன் பாதம் பணிந்து
தொடங்கும் செயலும் வெற்றியே!!

21. பிணியும் நோவும் பிறவும் விலக்குவார் (நம்மைப்) பெற்றதாயினும்
அன்புடன்; பணிவதே நாம் பயன் பெற நற்பாதையாகிட
விரும்புவோம்!!

22. மங்கலம் தரும்; மனமும் மகிழ்ந்திட மக்கட் செல்வமும்
தந்திடும்! எங்கள் குருவாம் ராகவேந்திரர் இணையடிதனைப்
போற்றுதும்!!

23. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட பொழிகுவான்
அவன் அருள்தனை எங்கள் இல்லம் என்றும்
சிறக்க இசைத்து மனமதும் மகிழுவோம்!!

0 கருத்துக்கள்: