உண்மைச் சம்பவங்கள்



மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீதரன்- கங்கா என்று ஒரு தம்பதியர். ஸ்ரீதரன் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்தபோது இதய நோய்க்காக "பைபாஸ்' செய்து கொண்டவர். இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிகிறார் கள். ஸ்ரீதரன்- கங்கா தம்பதியரும் ஸ்ரீராகவேந்திர பக்தர்கள். ஒரு சமயம் ஸ்ரீதரனை வீட்டிலேயே விட்டுவிட்டு கங்காவும் அவருடைய உடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்காள் என அனைவரும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள இறைமங்கலம் எனும் கிராமத்திலிருக்கும் ஸ்ரீராக வேந்திர மடத்திற்குச் சென்றுள்ளனர். பூஜை, புனஸ்காரம், அன்னதானம் முடிந்தபோது திருமதி கங்காவிற்கு ஓர் அதிர்ச்சிகரமான தொலைபேசி செய்தி வந்தது.

"வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் திடீரென மயங்கி விழுந்து, உடல் நலம் குன்றி ஆபத்தான நிலையில் இருக்கிறார். ப்ளாட்டில் இருந்தவர்கள் சென்னையின் புகழ் பெற்ற ஒரு மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு வரவும்.' -இப்படி செய்தி வந்தவுடன் திருமதி கங்காவும் உறவினர்களும் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவர, ஆபத்தான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளை சிறிது சிறிதாக செயலிழக்கத் துவங்கிவிட்டதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டுமெனவும் டாக்டர் கள் கூற, எப்படியாவது பிழைத்தால் போதும் என உறவினர்கள் சொல்லிவிட்டனர். மூளை ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும், சில மணி நேரங்களில் "கோமா' நிலையை அடைந்து விட்டார் ஸ்ரீதரன். எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். டெல்லியிலிருந்து கோவை வரை உள்ள உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரங்களிலோ ஓரிரு நாளிலோ ஸ்ரீதரனின் கதை முடிந்துவிடும் நிலை. அப்போதுதான் ஸ்ரீராகவேந்திரரின் அருட்கடாட்சம் கிடைத்தது.

நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு முதியவர் நுழைகிறார். இந்த அகால நேரத்தில் ஒரு முதியவர் நுழைவ தைக் கண்ட இரவுப் பணி மருத்துவர்கள் சிலர் தூரத்திலிருந்து ஓடி வருகிறார்கள். அவர்கள் வந்து ஐ.சி.யூ.வின் கதவைத் திறந்து பார்த்தபோது அந்த முதியவரைக் காணவில்லை. ஆனால் கோமா நிலையிலிருந்த ஸ்ரீதரன் எழுந்து உட்கார்ந்திருந்தார். மருத்துவர்கள் வியப்புற்று ஸ்ரீதரனை என்ன நிகழ்ந்தது என்று கேட்க, தன் காதருகே "ஸ்ரீதரா... உனக்கு ஒன்றுமில்லை; எழுந்து உட்கார்' என்று மூன்று முறை யாரோ சொன்னதாகவும்; எழுந்து உட்கார்ந்தபோது வேகமாக ஒரு பெரியவர் வெளியே போனதைப் பார்த்ததாகவும் சொன்னார்.

யார் அந்தப் பெரியவர்? ஸ்ரீதரன்- கங்கா தம்பதியர் வந்தவர் ஸ்ரீராகவேந்திரரே என்று பக்தியுடன் சொல்கிறார்கள். உண்மை... இது சத்தியம்! எண்ணற்ற பக்தர்களின் குறையை நீக்க கல்ப விருக்ஷமாய்- காமதேனுவாய் இருந்து, அதர்மங்கள் பெருகும் இக்கலியுகத்தில் ஸ்ரீராகவேந்திரர் அருள்புரிகிறார் என்பது நிஜம். நாமும் அவரை மனதாரத் துதிப் போமாக!

"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!'

0 கருத்துக்கள்: